Sunday, March 17, 2013

எங்கோ தொலைத்து விட்டேன்!

வ்வளவு பெரிய உலகத்திலே, நான் கேட்டதெல்லாம் என் தனித்துவதிற்கென்று ஒரு சிறிய அங்கீகாரம் மட்டுமே. மற்றவரைப் போல் நான் இல்லை, எனக்கென்று ஒரு கொள்கை, தனி பாணி உண்டு என்றெல்லாம் வீராப்பு பேசி தொழில் தொடங்கி விட்டேன். அனைத்தும் சிறப்பாகவே சென்று கொண்டிருந்தாலும், தொழிலில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு பின்னடைவுகள், என்னை மீறிய வெளிக் காரணங்களால் வேலையில் ஏற்பட்டு விடும் தொய்வு, கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு என்று அடிக்கடி மனம் துவண்டு போகின்றது. இது போதாதென்று ஊரைச் சாராமல் புது முயற்சி எடுத்த குற்றத்திற்காக பெண்பாலரும் ஒதுங்கிச் செல்வதால் மனம் சுக்கு நூறாகிப் போகின்றது.

இப்படி ஒரு நாள் மனம் துவண்டு போன நேரத்தில் சுய முயற்சி, முன்னேற்றம், தனித்துவம், அங்கீகாரம் என்று என் தேவைகள் இவை தான் என நான் அறிந்து கொண்ட பள்ளிப் பருவத்தை திரும்பிப் பார்த்தேன். அப்போதெல்லாம் வீட்டில் இருந்த கொய்யா மரத்தில் கிடு கிடுவென ஏறி விடுவேன்.... விழுந்து விடக் கூடும் என தெரியாததால். பல முறை புண் பட்டும், விடா முயற்சியுடன் அக்காளின் மிதிவண்டியை உருட்டியே செலுத்தப் பழகிக் கொண்டேன்... காயம் பட்ட வலியை விட நண்பர்கள் முன் வண்டி ஓட்டிக் காட்டும் பெருமை பெரிதாகத் தெரிந்ததால். பள்ளியில் அனைவர் முன்னிலையிலும் தரையில் முட்டி போடச் செய்தால் திருந்தி விடுவேன் என்று நம்பி ஏமாந்த நல்லாசிரியர்கள் பலர். அவ்வாறான தண்டனைகள் போதாதென்று நம்மூரின் ஹைதர் அலி காலப் பாடத் திட்டத்தின் இன்னல்கள் வேறு என, எவையும் என்னை பாதித்ததேயில்லை. ஆண்டுக்கணக்கில் காலையும் மாலையும் ஒரு பெண்ணைப் பற்றியே நினைத்து நினைத்து உருகியதுண்டு, சுற்றியதுண்டு. அது யாருக்கும், ஏன் அந்த பெண்ணுக்கே தெரியாமல் போன போதும் நேர விரயம் என்று ஒரு போதும் வருந்தியதில்லை. கல்லூரி இறுதி ஆண்டில் என் வயதை விட அதிகமான தாள்களில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இருந்த போதும், பின் இருபத்தி மூன்று தாள்களை ஆறே மாதங்களில் வெற்றி பெற்ற போதும் கூட ஒரு துளி அச்சமோ, சலனமோ ஏற்பட்டதில்லை.

அதன் பிறகு ஓடிய வருடங்கள், கற்ற பாடங்கள், சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள், பழகிய உள்ளங்கள், பட்ட துன்பங்கள், அடைந்த இன்பங்கள், என இவை யாவும் என் மனதை பக்குவப் படுத்தி இருக்க வேண்டுமே. ஆனால் பள்ளிப் பருவத்தில் நான் அறியாத தயக்கமும், குற்ற உணர்ச்சியும் இன்று குழப்பங்கள், சஞ்சலங்கள் என உருவெடுத்து என்னை வாட்டுகின்றனவே. எனக்காக இருந்த தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் குலைத்ததைத் தவிர என் கல்வியும் அனுபவமும் வேறெதுவும் செய்து விட்டதாகத் தெரியவில்லை. அன்று இருந்த ஆர்வம் மட்டும் அப்படியே இருக்கின்றது, தன்னை கவலை இல்லாமல் வெளிப்படுத்தத் திணறிக் கொண்டு.

No comments: